சிம்மக்கல் செல்லத்தம்மனுக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிம்மக்கல் செல்லத்தம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா நேற்று நடந்தது. இன்று சட்டத்தேரில் அம்மன் வீதி உலா வருகிறார்.

Update: 2023-01-20 18:45 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிம்மக்கல் செல்லத்தம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா நேற்று நடந்தது. இன்று சட்டத்தேரில் அம்மன் வீதி உலா வருகிறார்.

சிம்மக்கல் செல்லத்தம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலாக, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ளது. முற்காலத்தில் பாண்டிய நாட்டு மணவூரை தலைநகராக கொண்டு குலசேகர பாண்டிய மன்னர் ஆண்டு வந்தார். அவரிடம் தனஞ்செயன் என்ற வணிகன் தான் கடம்பவனக்காட்டில் கண்ட அற்புத காட்சியை கூறினார். அப்போது குலசேகரன மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றி கடம்பவனக்காட்டை திருத்தி புதிய மதுரை நகரை உருவாக்கினார். அப்போது காளிதேவிக்கு வடக்கு திசையில் கோவில் ஒன்றையும் அமைத்தார்.

அந்த காளிதேவி பிற்காலத்தில் தன்னை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை போக்கி இன்பத்தை வழங்குவதுடன் செல்வ வளமும் அருளியதால் செல்வத்தம்மன் என்று அழைக்கப்பட்டு மருவி செல்லத்தம்மன் என்று அழைக்கப்பட்டார். அந்த அம்மன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய, வரத கரம் ஆகிய 8 கரங்களுடன் வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்து அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார். மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடுவோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும்.

பட்டாபிஷேகம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நாளை (22-ந் தேதி) வரை நடைபெறுகிறது. செல்லத்தம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

விழாவில் முத்தாய்ப்பாக நேற்று செல்லத்தம்மன் பட்டாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது அம்மனுக்கு பொட்டும், பட்டும் சாற்றப்பட்டது. தொடர்ந்து செல்லத்தம்மன் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வீதிகளில் வலம் வந்து கோவிலில் எழுந்தருளினார். இன்று சட்டத்தேரும், நாளை (22-ந் தேதி) மலர்ச்சப்பரமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்