சிவகாசி சிவன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
சிவகாசியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
சிவகாசி,
சிவகாசியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
சிவன் கோவில்
சிவகாசி நகரின் மையப்பகுதியில் விஸ்வநாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அப்போது இருந்த அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று தெய்வீக பேரவை என்ற அமைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் நகர மக்களின் பொருளுதவியால் கோவிலுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சிவன் கோவிலுக்கு கோபுரம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து சிவகாசிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கோவில் கோபுரம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வரை கோவில் கோபுரம் கட்டுமான பணி தொடங்கப்படாத நிலை உள்ளது. இதற்கிடையில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் நடைபாதையில் வைத்து வழங்கப்படுவதால் அதனை தவிர்த்து அன்னதான கூடம் அமைத்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அன்னதானம் கூடம் அமைக்கும் பணியும் தொடங்கப்படவில்லை.
எப்போது?
கடந்த காலங்களில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் கோவில் நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் கோவிலில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. கும்பாபிஷேக பணிகள் செய்ய வசதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகரின் முக்கிய பிரமுகர்கள் கொண்ட குழுஅமைத்து அவர்களிடம் கருத்துகேட்டு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.