மதுரை மாவட்டத்தை இணைக்கும்மல்லபுரம் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லப்புரம் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து வழியாக மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லபுரம் மலைப்பாதை அமைந்துள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சில இடங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து தாழையூத்து பகுதி பொதுமக்கள் கூறுகையில், தாழையூத்து-மல்லபுரம் இடையே மலைப்பாதை அமைக்கப்பட்டபோது அரசு மினி பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் 2 மாவட்ட பொதுமக்களும் பயன் அடைந்தனர். அதன் பின்னர் போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை சேதமடைய தொடங்கியது. மேலும் மரம், செடிகள் ஆக்கிரமிப்பால் சாலையின் அளவு குறுகியதால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்று தற்போது சாலை மிகவும் சேதமடைந்ததால் பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. தற்போது மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாய விளைபொருட்களை அதிக தூரத்தில் உள்ள க.விலக்கு, ஆண்டிப்பட்டி வழியாக மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பயண செலவும், நேர விரையமும் ஏற்படுகிறது. எனவே மல்லபுரம் மலைப்பாதையை சீரமைக்க 2 மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆபத்தான வளைவுகளில் புதிய தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்றனர்.