கோவையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை;200 பேர் கைது
கோவையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை;200 பேர் கைது
கோவை
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று காலை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் எம்.என். கந்தசாமி, கோவை மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அழகு ஜெயபால், மாநில பொதுச்செயலாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மீது பொய் வழக்குபோடும் அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் கூறியதாவது:-
மாபெரும் போராட்டம்
காங்கிரஸ் கட்சியானது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ராகுல்காந்தியை முன்நிறுத்துகிறது. இதனால் பா.ஜ.க. தொடர்ந்து ஜனநாயகத்துக்கு புறம்பாக தனது செயல்பாடுகளை வடிவமைத்து வருகிறது. தங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் கட்சிகளை சர்வாதிகார முறையில் நசுக்க முயல்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்தி அலைக்கழிப்பு செய்கிறார்கள். நாட்டுக்காக நேரு குடும்பம் செய்த தியாகம் ஏராளம். விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அலக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினரின் அலுவலகம் புகுந்து தாக்கும் போலீஸ் துறையை கண்டிக்கிறோம். இந்த சம்பவம் தொடர்ந்தால் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
200 பேர் கைது
இதில் ராம்கி, கவுன்சிலர் முருகேசன், மாநில செயலாளர்கள் பழையூர் செல்வராஜ், விஜயகுமார், சொக்கம்புதூர் கனகராஜ், முன்னாள் மேயர் வெங்கடாசலம், கவுன்சிலர் காயத்ரி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.