கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு: கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருளில் உள்ள இந்தியாவை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமை தாங்கி ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்தும், பா.ஜ.க.வை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து தீப் பந்தங்களை கைகளில் ஏந்தியபடி கச்சேரி சாலை வழியாக ஊர்வலமாக நான்கு முனை சந்திப்பு வரை சென்றனர். இதில் மாவட்ட முன்னாள் தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட நிர்வாகி திருப்பதிராஜ், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கவுதம், நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜு, இளவரசன், இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.