காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி; தள்ளுமுள்ளு

காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2023-04-15 18:48 GMT

ராகுல்காந்தி, எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், மாநிலச்செயலாளர் வக்கீல் இளங்கோ, மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், பொருளாளர் ராஜா நசீர், பொதுச்செயலாளர்கள் சரவண சுந்தர், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக அங்கிருந்து ஜங்ஷன் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ரெயில் நிலையம் நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தடையை மீறி காங்கிரசார் செல்ல முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட 259 பேரை போலீசார் கைது செய்து தனியார் ஓட்டலில் தங்க வைத்தனர். இதில் 31 பெண்களும் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்