ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை - கே.எஸ்.அழகிரி
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்றம் விடுவித்துள்ளது. கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழர்கள் என்றால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தமிழர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லலாமா?.
கோவை குண்டுவெடிப்பில் கைதான இஸ்லாமியர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள். எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளை கொண்டாடக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் ஒரே கருத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். மதசார்பின்மை என்பதில் நாங்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.