கலெக்டர், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வாழ்த்து
வேப்பனப்பள்ளி அருகே 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 2 கைகளையும் இழந்து சாதனை படைத்த மாணவரை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 2 கைகளையும் இழந்து சாதனை படைத்த மாணவரை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவன்
கிருஷ்ணகிரி அருகே உள்ள சோக்காடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி- அருள்மூர்த்தி தம்பதியினர் மகன் கீர்த்திவர்மா. இவருக்கு 4 வயது இருக்கும் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, மாடியில் சென்ற மின்கம்பியை பிடித்ததில் மாணவர் இரு கைகளையும் இழந்தார். இதையடுத்து வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் தனது தாய் வீட்டுக்கு தனது மகன் கீர்த்திவர்மாவுடன் கஸ்தூரி சென்று விட்டார். தொடர்ந்து மாணவர் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
இந்த மாணவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்த மாணவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு தேவையான உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்து தருவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து மாணவர் கீர்த்திவர்மாவிற்கு தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்கி வாழ்த்தினர்.
கலெக்டர் வாழ்த்து
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரு கைகளையும் இழந்து சாதனை படைத்த மாணவர் கீர்த்திவர்மாவை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சந்தித்து, இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவரிடம் முதல்-அமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். பின்னர் மாணவர் கீர்த்திவர்மா மற்றும் அவரது தாயார் கஸ்தூரி ஆகியோரை தனது வாகனத்தில், கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தேநீர் வழங்கினார்.
தொடர்ந்து மாணவருக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து தரப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் சையத்அலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மருத்துவ காப்பீட்டு அட்டை மாவட்ட அலுவலர் ராஜ்குமார், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மருத்துவ உதவி
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், மாணவர் கீர்த்திவர்மாவிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் செயற்கை கை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது மாணவரின் மருத்துவ உதவிக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும் என்றார்.
தி.மு.க.- அ.தி.மு.க.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஜீனூர் கிராமத்திற்கு சென்று, மாணவர் கீர்த்திவர்மாவை பாராட்டி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கி வாழ்த்தினார். அதேபோல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், அன்பரசன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், கோவிந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதேபோல், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., மாணவர் கீர்த்திவர்மா வீட்டிற்கு சென்று தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கி வாழ்த்தினார். அத்துடன் மேல்நிலை கல்வி பயில தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதேபோல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. நிர்வாகிகள் சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
இதேபோல் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகன், மாணவர் கீர்த்திவர்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராகவன், பழனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து தி.மு.க. கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், மாணவர் கீர்த்திவர்மாவை நேரில் சந்தித்து ரூ.5 ஆயிரம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், தி.மு.க. பிரதிநிதியும், தொழில் அதிபருமான கே.வி.எஸ்.சீனிவாசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவி அம்சவேணி செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.