நெல்லிக்குப்பம் அருகே ரத்தக்காயங்களுடன் தொழிலாளி பிணம்: எல்லைப்பிரச்சினையால் விசாரணை நடத்துவதில் போலீசாரிடையே குழப்பம்
நெல்லிக்குப்பம் அருகே ரத்தக்காயங்களுடன் தொழிலாளி பிணமாக கிடந்தார். எல்லைப்பிரச்சினையால் விசாரணை நடத்துவதில் போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சி.என். பாளையத்தை சேர்ந்த தொழிலாளி வடிவேல்(வயது 42) என்பது தெரியவந்தது.
இருப்பினும் அவர் இறந்து கிடந்தது ரெயில்வே தண்டவாளம் அருகில் என்பதால், ரெயில்வே போலீசார் தான் விசாரிக்கவேண்டும் என்று அவர்கள் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது தண்டவாளத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு தாண்டி இறந்தவரின் உடல் உள்ளதால் நாங்கள் விசாரணை செய்ய இயலாது. ஆகையால் நெல்லிக்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
கொலையா?
இதையடுத்து வடிவேலின் உடலை நெல்லிக்குப்பம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை யாரேனும் அடித்துக்கொலை செய்து விட்டு இங்கு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லைப்பிரச்சினையால் இறந்து கிடந்தவரின் உடலை யார் மீட்டு விசாரணை நடத்துவது என்ற குழப்பம் ரெயில்வே மற்றும் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.