இருதரப்பினர் இடையே மோதல்; நாட்டு வெடிகுண்டு வீச்சு

சமயபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-08-12 19:17 GMT

சமயபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணல் கடத்தல்

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடியைச் சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணலை கடத்தி சென்றவர்களுக்கும், அதனை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு தாளக்குடி பஜனை மடத்தெருவை சேர்ந்த குமார் மகன் பழனி (வயது 29), கீரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன்கள் ராஜதுரை (28), பரந்தாமன் (22) ஆகியோர் மாட்டு வண்டியில் மணலை கடத்திக்கொண்டு சமயபுரத்தை அடுத்த அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெரு வழியாக சென்றுள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மாட்டு வண்டியை பிடித்து வைத்துக் கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாட்டு வண்டியுடன் வந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு

இந்நிலையில், நேற்று மாலையில் பரந்தாமன், குமார், ராஜா உள்ளிட்ட சிலர் கையில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவுக்குள் சென்றுள்ளனர். இதனை கண்ட சுரேஷ் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மித்ரன் உள்ளிட்ட சிலர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, பரந்தாமன் தரப்பினர் சுரேஷ் மற்றும் மித்ரனை அரிவாளால் வெட்டி அவர்களது வீட்டையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த புறாமணி, சுரேஷ், மித்ரன் ஆகியோர் திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.

இப்பகுதியில் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக தற்போது, மோதல் நடைபெற்றுள்ளது. எனவே மணல் கடத்தலை தடுக்க இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்