இருதரப்பினர் இடையே மோதல்; 10 பேர் மீது வழக்கு

புன்னம் சத்திரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-07-05 19:11 GMT

இருதரப்பினர் இடையே மோதல்

புன்னம் சத்திரம் அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஆரிஸ் (வயது 31), பெயிண்டர். இவர் தனது நண்பரின் தாய் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மைதானத்தில் அவரது தம்பி புகழூர் முருகம்பாளையத்தை சேர்ந்த முகமது சபீருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஜெயராஜூக்கு ஆதரவாக அசோக் சுந்தர் சிங் (36), ராஜேஷ், மகேஷ், தினேஷ், பிரவீன், வாசுகி, பாலு ஆகியோர் வந்தனர். பின்னர் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த 8 பேரும் முகமது ஆரிஸ் மற்றும் அவரது தம்பி முகமது சபீரை தென்னை மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

10 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் முகமது ஆரிஸ் மற்றும் அவரது தம்பி முகமது சபீர் ஆகியோர் அசோக் சுந்தர் சிங்கை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் வைத்திருந்த பிளேடால் தோள்பட்டை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழித்ததாக கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இருதரப்பை சேர்ந்தவர்களும் தனித்தனியாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இருதரப்பை சேர்ந்த முகமது ஆரிஸ், முகமது சபீர், ஜெயராஜ், அசோக் சுந்தர் சிங், ராஜேஷ், மகேஷ், தினேஷ், பிரவீன், வாசுகி, பாலு ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்