வணிகர் சங்கங்களுக்கு இடையே மோதல்

வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடைகள் அடைக்கப்பட்டது.

Update: 2023-05-02 18:44 GMT

3 பேர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சி.எல்.சாலையில் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வருகிற 5-ந் தேதி ஈரோட்டில் நடக்க இருக்கும் வணிகர் உரிமை முழக்கம் மாநாட்டு அழைப்பிதழை நிர்வாகிகளுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு எதிராக வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் மாநாட்டு துண்டுப்பிரசுரங்களை அதே பகுதியில் வழங்கி வந்தனர்.

அப்போது திடீரென இரு வணிகர் சங்கங்கள் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னர் மோதல் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதில் விக்கிரம ராஜா தலைமையிலான வணிகர் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், அப்ரார் மற்றும் அருண்குமார் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடைகள் அடைப்பு

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பஸ் நிலையம், சி.எல்.சாலை, பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து திடீரென பஸ் நிலையத்தில் வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். மாதேஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். சங்க நிர்வாகிகள் அளித்த மனுவையும் போலீசார் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து வணிகர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்