குறிஞ்சிப்பாடி அருகேஇருபிரிவினரிடையே மோதல்; 5 வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு9 பேர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, 5 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-05-29 20:33 GMT

குறிஞ்சிப்பாடி, 

தகராறு

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வரதராஜன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி மகன் சுரேன் (வயது 36), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதேஊரில் நீளம்கட்டி குளம் அருகே உள்ள தனக்கு சொந்தமான வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர்களான அதேஊரை சேர்ந்த சுரேஷ், சிவமணி, குணால், சண்முகசுந்தரம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி- கல்குளம் மெயின் ரோட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக கல்குணம் காலனியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த சுரேனின் நண்பர்கள், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 4 வாலிபர்களை ஏன் வேகமாக செல்கிறீர்கள், மெதுவாக செல்லுமாறு கண்டித்ததாக தெரிகிறது.

தாக்குதல்

அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சுரேன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து கல்குணத்தை சேர்ந்த வாலிபர்களை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வாலிபர்கள் இதுபற்றி தங்களது பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு ஆத்திரமடைந்த கல்குணம் காலனியை சேர்ந்த சிலம்பரசன், விக்னேஷ், அரவிந்த், சேதுபதி உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல் விரைந்து வந்து சுரேன் உள்ளிட்ட 5 பேரையும் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு சென்று விட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சுரேன் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் கல்குணம் காலனிக்கு விரைந்து சென்று அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 3 மினிலாரிகள், 2 இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், தட்டிக்கேட்ட பார்கவி மற்றும் 15 வயது சிறுவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருதரப்பை சேர்ந்த சுரேஷ், சிவமணி, குணால் மற்றும் பார்கவி, 15 வயது சிறுவன் ஆகியோர் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

40 பேர் மீது வழக்கு

மேலும் இந்த சம்பவம் குறித்த தனித்தனி புகார்களின்பேரில் இருதரப்பை சேர்ந்த 40 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, கல்குணத்தை சேர்ந்த சிலம்பரசன்(27), ராஜராஜன்(20), ராமர்(27), 17 வயது சிறுவன், 18 வயது சிறுவன் மற்றும் வரதராஜன்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (29), வீரமணி (21), குணால் (20), சசிதரன் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 கிராமங்களில் பதற்றம் நிலவுவதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்