மறுமுத்திரையிடாத எடைக்கருவிகள் பறிமுதல்
மறுமுத்திரையிடாத எடைக்கருவிகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தலின்பேரில் தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அபிராமம் வாரச்சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மறுமுத்திரை இல்லாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 12 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள், 5 விட்ட தராசுகள், 15 இரும்பு எடைக்கற்கள் என மொத்தம் 36 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்பாட்டில் வைத்திருந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் தங்கள் கடைகளில் பயன்பாட்டில் வைத்திருக்கும் தராசுகளை முறையாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும் எனவும், நுகர்வோருக்கு முறையான எடையளவில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்த தகவலை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்விழி தெரிவித்தார்.