வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்
அரூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல் ராஜஸ்தான் வாலிபர் கைது
அரூர்:
அரூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தசாமி நகரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ள ஒரு வீட்டில் திடீரென சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக வீட்டில் இருந்த மகேந்திரகுமார் (வயது 23) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 333 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.