வடமாநில தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு
வடமாநில தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் மாநிலம் மகேபுரா பைரோபட்டியை சேர்ந்தவர் முகமது இர்சாத் ஆலம் (வயது30). கட்டிட தொழிலாளியான இவர் பீகார் பகுதியை சேர்ந்த சிலருடன் ராமநாதபுரம் வந்து ரெயில் நிலையம் பகுதியில் குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இவர்கள் பணி முடிந்து கட்டிட பகுதியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் 4 பேர் அந்த கட்டிடத்திற்குள் புகுந்து 2 செல்போன்களையும் முகமது இர்ஷாத் ஆலம் சட்டை பையில் வைத்திருந்த ரூ.13 ஆயிரத்து 500-யும் பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றனர்.
மேலும் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது கத்தியை காட்டி மிரட்டி விட்டு காரில் தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், தொழிலாளர்களிடம் பணம், ெசல்போன் பறித்தது கீழக்கரை மேல தெரு செய்யது முகம்மது அல்பவாஸ் (25), மகன் சூரிய பிரகாஷ் (19) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.