மினி லாரியில் கடத்திய 850 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
வல்லநாடு அருகே மினி லாரியில் கடத்திய 850 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே தெய்வசெயல்புரம் நான்குவழிச்சாலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் 55 மூட்டைகளில் மொத்தம் 850 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மினி லாரியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த ஜான்சன் மகன் அருள்ராஜ் (35), வெங்கடேஷ் மகன் செல்வம், ஜெமில் மகன் வாசீம் (34), நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் காளிமுத்து (34) என்பதும், பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.