திண்டுக்கல்லில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல்லில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரியின் பின்புறம் உள்ள குடோனில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அந்த குடோனில் சோதனை செய்தனர். அப்போது குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தாடிக்கொம்புவை அடுத்த அம்மாகுளத்துப்பட்டியை சேர்ந்த கவுதம் (வயது 23) என்பவர் அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. திண்டுக்கல் பகுதியில் சேகரித்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த அவர் போலீசார் வருவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.