எடப்பாடி அருகே சின்னப்பம்பட்டி சுடுகாடு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கிடப்பதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் எடப்பாடி அருகே சின்னப்பம்பட்டி கிராமத்தில் சோதனை செய்தனர் அப்போது அங்குள்ள சுடுகாட்டில் 24 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் மேல்பாவடி தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது58) என்பவர் ரேஷன் அரிசியை கடத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைதுசெய்தனர்.