புத்தாண்டு தினத்தன்று அதிவேகமாக வாகனம் ஓட்டினால் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று 37 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என்றும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரித்து உள்ளார்.

Update: 2022-12-30 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று 37 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என்றும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரித்து உள்ளார்.

1,150 போலீசார் பாதுகாப்பு

இதுகுறித்து அவர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி மாவட்டம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து இல்லாத பாதுகாப்பான மகிழ்ச்சியான புத்தாண்டாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

இன்று (சனிக்கிழமை) மாலை முதல் நாளை புத்தாண்டு காலை வரை போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்கென மாவட்டம் முழுவதும் 1,150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 7 சோதனை சாவடிகள் உள்பட 37 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள 181 வழிபாட்டு தலங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

முக்கியமாக ராமேசுவரம் கடற்கரை, அரியமான் கடற்கரை, கீழக்கரை கடற்கரை மற்றும் பரமக்குடி போன்ற இடங்களில் தகுந்த பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 23 இடங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஒவ்வொரு துணை கோட்ட பகுதிகளில் 4 சக்கர வாகன ரோந்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவு நேரத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு வழக்கு பதிவு செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்களுக்கும், வழிபாடுகளுக்கு செல்பவர்களுக்கும் எந்தவித இடையூறும் இன்றி கொண்டாட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கேக் வெட்டும்போது ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. ரிசார்ட் உள்ளிட்ட இடங்களில் ஆபாச நடனம் உள்ளிட்டவைகள் நடத்தக்கூடாது. இதற்காக அதுபோன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும். மக்கள் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்