குருபரப்பள்ளி அருகே லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2023-06-22 19:30 GMT

கிருஷ்ணகிரி:

குருபரப்பள்ளி அருகே கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட கலெக்டர் சரயு அமைத்துள்ளார்.அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்த்துறையினர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.

15 டன் அரிசி பறிமுதல்

அதில் 25 கிலோ அளவிலான 600 சாக்கு பைகளில் 15 டன் ரேஷன் புழுங்கல் அரிசி கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 37) என்பவரை பிடித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் விசாரணையில் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கன்டெய்னர் லாரி ஆகியவை தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்