பாலக்கோடு பகுதியில்அசைவ உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வுமார்க்கெட்டுகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

Update: 2023-07-31 19:30 GMT

தர்மபுரி:

பாலக்கோடு பகுதியில் அசைவ உணவகங்கள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கலெக்டர் உத்தரவு

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அசைவ உணவகங்கள், சாலையோர துரித உணவகங்கள், சில்லி சிக்கன், மீன் இறைச்சி கடைகள், பலகார கடைகள் விற்பனை செய்யும் பொருட்கள் தரமானதாகவும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் உபயோகப்படுகிறதா? உணவுப் பொருட்களுக்கு தேவையற்ற செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகிறதா? சுற்றுப்புற சுகாதாரம் பின்பற்ற படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மீன் மார்க்கெட், மீன் விற்பனை நிலையங்களில் மீன்கள் தரமானதாக விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு பகுதியில் உள்ள அசைவ உணவகங்கள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் ஆய்வு செய்தனர். 10-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜிலேபியா, ரோக், ரூப்சந்த், விரால், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர்.

மீன்கள் பறிமுதல்

இந்த ஆய்வில் ஒரு சில கடைகளில் தரம் குறைவான கெட்டுப்போன விரால் மற்றும் திலேபியா வகை மீன்கள் சுமார் 15 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது மேற்படி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு தொடர்ச்சியாக இப்படி நடந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை, எம்.ஜி. ரோடு, உள்ளிட்ட பகுதியில் உள்ள அசைவ, துரித உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.

விழிப்புணர்வு

ஆய்வில் ஒரு சில கடையிலிருந்து பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பார்சல் செய்வதற்கு சில்வர் பேப்பர்களில் பிரியாணி, குஸ்கா, பாஸ்ட் புட், பரோட்டா மற்றும் சில்லி சிக்கன், சில்லி இறைச்சி போன்ற உணவு வகைகள் நேரடியாக சில்வர் தாளில் படாமல் வாழை இலை பயன்படுத்தியோ, அலுமினிய பாக்ஸ் கன்டெய்னர்களையோ உபயோகிக்க வலியுறுத்தப்பட்டது. இரண்டு கடைகளிலிருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட சில்லி இறைச்சியும், பலமுறை பயன்படுத்தி சமையல் எண்ணெய் இரண்டு லிட்டர் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி, எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத கடைகளை உடனடியாக எடுக்க விழிப்புணர்வு வழிவகை துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்