வேலை தர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயார்: எந்த வேலையையும் செய்யும் மனநிலை இளைஞர்களிடம் வேண்டும் -மதுரையில் விக்கிரமராஜா பேட்டி

வேலை தர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருக்கிறது என்றும், எந்த வேலையையும் செய்யும் மனநிலை இளைஞர்களிடம் வேண்டும் எனவும் மதுரையில் விக்கிரமராஜா கூறினார்.

Update: 2023-02-22 20:26 GMT


வேலை தர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருக்கிறது என்றும், எந்த வேலையையும் செய்யும் மனநிலை இளைஞர்களிடம் வேண்டும் எனவும் மதுரையில் விக்கிரமராஜா கூறினார்.

மண்டல கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரை மண்டல கூட்டம் அவனியாபுரம் பகுதியில் நடந்தது. மண்டல, மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அழகேசன் வரவேற்றார். மாநில இணை செயலாளர் திருமுருகன், மாநில துணை தலைவர் டேனியல் தங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு, ஈரோட்டில் மே மாதம் நடக்கும் 40-வது வணிகர் தின மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரி, உணவு பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் பேசினார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது. ஆனால், வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக வேண்டும். அரசு வேலைக்குதான் செல்ல வேண்டும் என சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மனமாற்றம் அடைந்து எந்த வேலையும் செய்ய தயாராக இருந்தால் அவர்களுக்கு வேலை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படும்நிலை ஏற்பட்டால் தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். விமான கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை வைத்திருக்கிறோம். மத்திய அரசின் பட்ஜெட், வணிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சாமானியர்களை நசுக்கி கொண்டிருக்கிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், உணவு பாதுகாப்பு நிர்ணய சட்டம் சரியான திட்டமிடாமல் உள்ளது. இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் மாநில பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாதம் தோறும் ஏற்பாடு செய்ய வேண்டும். டி அன் ஓ கட்டணம் மதுரை மாவட்டத்தில் மிக அதிகமாக உள்ளது. அதனை குறைத்திடவும், எந்தவித கையூட்டிற்கும் இடமளிக்காமல் வணிகர்கள் நேரடியாக ஆன்லைனில் உரிமத்தை புதுப்பிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு நிர்ணய சட்டத்தின்படி, ஆண்டு ரிட்டன் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதனை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் என்ற விதியை நீக்கி வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார். இதில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்