போலீஸ் நிலையத்தில் மனைவியை தாக்கிய கண்டக்டர் கைது
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் மனைவியை தாக்கிய கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை தச்சநல்லூர் கீழக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி முத்துக்குமார் திடீரென மாயமானார். இதுகுறித்து கவுதமி தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமாருக்கும், பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதும், இருவரும் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது முத்துக்குமாரை, கவுதமியுடன் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர் அதற்கு மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது முத்துக்குமாரும், அந்த பெண்ணும் சேர்ந்து கவுதமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமார் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.