சோழகனூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்துலாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
சோழகனூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்து லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இப்பணிக்காக விழுப்புரம் அருகே சோழகனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ளப்பட்டு வருகிறது. ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவான 12 அடி ஆழத்திற்கு வண்டல் மண் அள்ளப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத கிராம மக்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோழனூர் கிராமத்தில் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ஏற்கனவே 50 ஏக்கர் அளவிற்கு மண் அள்ளப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள ஏரி பகுதியிலும் அளவுக்கு அதிகமாக 12 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மண் அள்ளப்படுவதாக குற்றம்சாட்டியதோடு ஏரியில் மண் அள்ளும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முறையிட்டனர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகு ஏரியில் மண் அள்ளப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.