பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் 10-ந் தேதி முற்றுகைஅனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 10-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து கருப்பு நிறமாக தண்ணீர் வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கூட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் நடந்தது. கூட்டத்துக்கு பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் பவானிசாகர் அணை தண்ணீர் கருப்பு நிறமாக வருகிறது. இதை குடிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. விவசாய பயிர்களும் அழிந்து போகும். எனவே பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து வருகிற 10-ந் தேதி காலை 10 மணி அளவில் பவானிசாகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.