தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 586 வழக்குகளுக்கு சமரச தீர்வு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ேதசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள 586 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ேதசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள 586 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கினார். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். விரைவு மகிளா நீதிபதி கோபிநாத், முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நீதித்துறை நடுவர் நீதிபதிகள் நிலவேஷ்வரன், பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி குமரகுரு பேசியதாவது:-
பணம், காலம் மிச்சம்
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினரும் வெற்றி பெற்றதாக கருதபடுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது.
இதனால் பணம், காலம் மிச்சமாகிறது. மேலும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள உறவுகள் மேம்படுகிறது. வழக்கில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்ப கிடைக்கப்படுகிறது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய கோர்ட்டுகளில் 8 அமர்வுகளில் நடைபெற்று உள்ளது. சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகளை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பேசி சமரச தீர்வு கண்டு கொள்ளலாம்.
எந்தவொரு பிரச்சினைக்கும் பேசினால் தீர்வு ஏற்படும் என்பதை இந்த லோக் அதாலத் நிகழ்வு மூலம் காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
586 வழக்குகளுக்கு சமரச தீர்வு
நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 1,697 வழக்குகள் எடுத்துக்கொண்டு அதில் 586 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.5 கோடியே 1 லட்சத்து 87 ஆயிரத்து 38 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.