1,243 வழக்குகளுக்கு சமரச தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,243 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-13 17:21 GMT

தேசிய மக்கள் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆர்.சக்திவேல் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் வேல்முருகன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நடுவர் ராஜ சிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், கிருஷ்ணகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, சங்க செயலாளர் ராஜா விஸ்வநாத் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ரூ.7¾ கோடிக்கு தீர்வு

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு 5,791 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,243 வழக்குகளில் ரூ.7 கோடியே 76 லட்சத்து 40 ஆயிரத்து 71-க்கு தீர்வு காணப்பட்டது.

இதில் கடந்த 15.5.2020 தேதியில் சாலை விபத்தில் குமுதா என்பவர் இறந்ததற்காக அவரது கணவர் மற்றும் மகன், மகள், ரூ.2 கோடி இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு சமரச மையத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ.95 லட்சம் முடிவு செய்யப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்