தஞ்சைக்கு ரெயிலில் வந்த 2,600 டன் உரம்

டெல்டா மாவட்டங்களில் கடும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் தஞ்சைக்கு 2,600 டன் உரம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் வந்தது. இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2022-12-03 21:08 GMT

தஞ்சாவூர்;

டெல்டா மாவட்டங்களில் கடும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் தஞ்சைக்கு 2,600 டன் உரம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் வந்தது. இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதத்தில் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதே போன்று சம்பா, தாளடி சாகுபடியும் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது.

கடும் உரத்தட்டுப்பாடு

இந்த நிலையில் சம்பா, தாளடி சாகுபடிக்கு பல்வேறு இடங்களில் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் நெற்பயிருக்கு அடி உரம் இட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் சாகுபடிக்கு தேவையான உரங்களை வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் உரம் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2,600 டன் உரம்

இதில் 21 வேகன்களில் 1,300 டன் டி.ஏ.பி.யும், 21 வேகன்களில் 1,300 டன் யூரியா உரமும் என மொத்தம் 42 வேகன்களில் 2,600 டன் உரம் வந்தது. தஞ்சையில் இருந்து இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உரம் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்