பி.எஸ்.என்.எல்.அதிகாரியிடம் புகார்

கண்ணமங்கலத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

Update: 2023-08-18 18:06 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

பி.எஸ்.என்.எல். அலுவலகம்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் பெருமாள் கோவில் தெருவில் தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பி.எஸ்.என்.எல். டவர் அமைத்துள்ளனர்.

இந்த அலுவலகத்தில் அதிகாரிகள், பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மின்சாரம் உள்ளபோது இயங்கும் டவர் சேவை, மின்சாரம் துண்டிக்கும் போது ஜெனரேட்டர்களை இயக்க ஆட்கள் இல்லாததால் செல்போன் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

புகார்

இந்த நிலையில் இன்று செல்போன் சேவையை சரி செய்ய வேலூரில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலர் வந்தார்.

அப்போது கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் வி.சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட 50 பேர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரியிடம் புகார் செய்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். டவர் உள்ள இடம் பேரூராட்சிக்கு சொந்தமானது. பேரூராட்சிக்கு வாடகையும் தருவதில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த அவலநிலை உள்ளது.

அகற்ற வேண்டும்

டவரில் ஏராளமான குரங்குகள் வசிப்பதால் பொதுமக்களுக்கு தொல்லையும், எதிரே உள்ள ஆரம்பப் பள்ளி மாணவ-மாணவிகளின் உணவுப் பொருட்களையும் எடுத்து செல்கிறது.

எனவே செல்போன் டவரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே செல்போன் டவரை அகற்ற வேண்டும்.

மேலும் சேவை அடிக்கடி பாதிக்கப்படுவதால் பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் தற்போது வேறு கம்பெனி சிம்கார்டில் பேசும் நிலை உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரி் செல்போன் சேவையை சரி செய்யதான் வந்துள்ளோம் விரைவில் சீராகும் என்றார்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்