பள்ளிப்பட்டில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தியதாக புகார்விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தகவல்
கடலூர் அருகே பள்ளிப்பட்டில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரெட்டிச்சாவடி
கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற துணை தலைவர் கலாதேவி கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊராட்சிக்கு எதிராக...
கடந்த 4-ந்தேதி எங்கள் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு எனக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் எவ்வித அழைப்பும் கொடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவி கலைச்செல்வியின் கணவர் ராமச்சந்திரன், ஊராட்சி செயலாளர் மற்றும் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு கிராம ஊராட்சியின் நலன்களுக்கு எதிராகவும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு எதிராகவும் நடத்தி உள்ளார்.
ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ராமச்சந்திரனுக்கு ஆதரவாகவும், ஊராட்சிக்கு எதிராகவும் செயல்படுகிறார். எனவே, சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்திய மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
விளக்கம் கேட்டு நடவடிக்கை
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, இ்ந்த சம்பவம் தொடர்பாக எனக்கும் புகார் வந்துள்ளது. இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசாரணையில் சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டால், ஊராட்சி மன்ற தலைவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிய விளக்கம் கேட்கப்படும். அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையென்றால் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் மீது துணை தலைவர் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.