விஷம் வைத்து வனத்துறையினர் கொன்றதாக புகார்: 11 நாய்கள் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை உத்தரவு

வனத்துறையினர் விஷம் வைத்து 11 நாய்களை கொன்றதாக விவசாயிகள் தெரிவித்த புகார் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

Update: 2022-09-30 16:48 GMT

ஆர்.டி.ஓ. விசாரணை

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். விவசாயிகள் பேசும் போது, "கடமலை-மயிலை ஒன்றியம் கோரையூத்து பகுதியில் விவசாயிகள் வளர்த்த 11 நாய்களை வனத்துறையினர் விஷம் வைத்து கொன்று விட்டனர்.

இதுகுறித்து போலீசில் விவசாயிகள் புகார் கொடுத்தனர். அதற்கு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் கூறியதால் புகாரை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தனர்.

இதைக்கேட்ட கலெக்டர் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன். விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கலெக்டர் தெரிவித்தார்.

மாடுகள் ஒப்படைப்பு

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, "மலைமாடுகளுக்கு வனத்துறையினர் மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்காமல் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மாடுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கிறோம். ஒரு மாட்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் கொடுத்து விவசாயிகளிடம் இருந்து அரசே வாங்கிக் கொள்ளுங்கள். அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு கிராமங்களில் 1 மாதமாக மின்சாரம் வினியோகம் இல்லை.

அங்கு மின்மாற்றி அமைக்க அனுமதி கிடைத்துள்ள போதிலும், அந்த பணிக்கு பொக்லைன் எந்திரம் கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால் தொடர்ந்து மக்கள் இருளில் தவிக்கின்றனர் என்று கூறியிருந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அனுசுயா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்