நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார் மனு
போலியாக பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், நாங்கள் சந்தாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிமேட்டில் வசித்து வருகிறோம் இதில், 33 பேர் இப்பகுதியில் வீடு கட்டியும், 12 பேர், 2.60 ஏக்கரில் விவசாயம் செய்தும் வருகிறோம். எங்கள் நிலங்களுக்கான பத்திரங்கள் எங்கள் பெயரில் உள்ளது. சிட்டா அடங்கலில் எங்கள் பெயர்கள் உள்ளன.
எங்கள் கூட்டு பட்டாவை வேறு ஒருவருக்கு போலியாக பதிவு செய்துள்ளனர். பட்டா பெயரை மட்டும் பயன்படுத்தி அவர்கள் அனுபவத்தில் இல்லாத நிலங்களை மற்றவர்களுக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்துள்ளோம். இது குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவரின் பெயரை பட்டா வருவாய் ஆவணங்களில் இருந்து நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.