புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வசதி வழங்கப்படுமா?
ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். சுற்றியுள்ள கிராமங்களிலும் இதே நிலைதான் உள்ளது. கடுமையான இக்கோடை காலத்தில் குடிநீர் தங்குதடையின்றி வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், பரமக்குடி.
இருள் சூழ்ந்த பகுதி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் போதிய தெருவிளக்கு இல்லை. இதனால் இந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தேவையான தெருவிளக்குகளை ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர் மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் 2500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் மின் இனைப்புகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் தேவிபட்டினம் துணைமின் நிலையத்திலிருந்துதான் ஆட்கள் வந்து சரிசெய்ய வேண்டி உள்ளது. எனவே திருப்பாலைக்குடியில் துணை மின்நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அஹமதுகான், திருப்பாலைக்குடி.
வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன் குளத்தில் பஸ் நிலையத்திலிருந்து ஆற்றங்கரை வரையான சாலையின் இரு புறங்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் மீது முட்செடிகள் குத்தி அவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மேலும் விபத்து அபாயமும் உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரூக் உசேன், பனைக்குளம்.