விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு சுவர்
கோழிப்போர்விளையில் இருந்து பள்ளியாடி சாலையில் தாமரைகுளமும் அதன் அருகில் சாலையோரத்தில் கால்வாயின் மேல் பாலமும் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் ஓரமாக சாலையின் உள்பக்கத்தின் விபத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி விபத்து தடுப்புசுவரை சாலையில் வெளிபக்கமாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினு, குன்னத்தூர்.
பழுதடைந்த ெதருவிளக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரத்தில் இருந்து வேதநகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 3 தெருவிளக்குகள் பழுதடைந்து 2 வாரகமாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதகாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய தெருவிளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், வேதநகர்.
சீரமைக்கப்படுமா?
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி உள்ளது. இந்த பகுதியில் பட்டாரியர் நடுத்தெருவிற்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைத்து விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
வீணாகும் குடிநீர்
தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனமங்கலம் தெற்கு தெருவில் உள்ள பொது குழாயில் அடிப்பகுதியில் சேதமடைந்து குடிநீர் வீணாக பாய்கிறது. வெயில் காலத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இங்கு தண்ணீர் வீணாவது அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. மேலும், அருகில் உள்ள வீடுகளின் மண் சுவர்களும் சேதமடைகின்றன. எனவே, சேதமடைந்த குழாய்யை சீரமைப்பதுடன், அந்த குழாய் இணைப்பை 10 தூரம் தள்ளி இடையூறு இன்றி அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், தாழக்குடி.
கூடுதல் பஸ்கள் தேவை
நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து தான் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், குளச்சல், மணவாளக்குறிச்சி வழித்தடங்களில் இருந்து வடசேரிக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளச்சல், மணவாளக்குறிச்சி வழித்தடங்களில் வடசேரி பஸ்நிலையத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.
அகற்றப்படுமா?
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பிடாரங்குழி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் வாகனங்கள், பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக குடிநீர் அடிபம்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த குழாயால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே, இந்த அடிபம்பு குழாய்யை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முஹம்மது ரபீக், திட்டுவிளை.
சீரான குடிநீர் வினியோகம் தேவை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. சில நேரங்களில் நள்ளிரவு நேரத்தில் லாரியில் கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்கின்றனர். இதனால், பெரும்பாலான மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் போவதால் குழந்தைகளுடன் பெரும் அவதிக்குளாகி வருகின்றனர். எனவே, பகல் நேரத்தில் லாரியில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இர்பான், புதுக்குடியிருப்பு.