புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-04-02 18:45 GMT

விரிவாக்கம் செய்ய வேண்டும்

கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் வடுகன்பற்று பகுதியில் இருந்து சாமிதோப்புக்கு செல்லும் பிரிவுச்சாலை செல்கிறது. இந்த சாலையின் வலது பகுதியில் கவர் குளத்தின் கரையோரமாக அலுமினியத்தாலானபாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியில் சாலை மிக குறுகலாக காணப்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிர் திசையில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

ரெயில் பயணிகள் அவதி

நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் வழியாக பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோட்டார் ெரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதனால், ெரயிலுக்கு செல்லும் பயணிகளுக்கு அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் மிகுந்த உதவியாக உள்ளது. ஆனால், அதே பஸ்கள் மறு மார்க்கமாக நாகர்கோவிலுக்கு வரும்போது ெரயிலுக்கு செல்லும் பயணிகளை 2 கிமீ தூரத்தில் உள்ள இடலாக்குடி சந்திப்பு மெயின் ரோட்டில் இறக்கி விடுகின்றனர். இதனால், பயணிகள் அங்கிருந்து ஆட்டோவிலோ அல்லது நடைபயணமாகவோ செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த வழித்தடத்தில் வரும் பஸ்களை ரெயில்நிலையம் வரை இயக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லியோன், மருங்கூர்.

விபத்து தடுப்புச்சுவர் தேவை

சுங்கான்கடையில் இருந்து ஆளூர் செல்லும் சாலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரை வழியாக செல்கிறது. ஆனால், குளத்தின் கரை பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி குளத்தின் கரை பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், ஆளூர்.

சேதமடைந்த சாலை

ஆழ்வார்கோவிலில் இருந்து பள்ளிவிளை, வீரவிளை வழியாக தக்கலை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. ஆனால் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகமணி, ஆழ்வார்கோவில்.

விபத்து அபாயம்

அழகப்பபுரம் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்கம்பம் சேதமடைந்தது காணப்பட்டது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றவில்லை. இதன் அருகில் பஸ் நிறுத்தம் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.ஏ.ஜஸ்டின், அழகப்பபுரம்.

இதையும் ெகாஞ்சம் கவனிங்க...

மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பல்வேறு உதவிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு வசதியாக போலீஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, அந்த பெயர் பலகையில் எழுத்துகள் அழிந்து படிக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெயர் பலகையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கா.வினுகுமார், மார்த்தாண்டம்.

Tags:    

மேலும் செய்திகள்