'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-02 17:00 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பொதுக்கழிப்பறை சரிசெய்யப்படுமா?

நத்தம் அருகே ஆவிச்சிபட்டி ஊராட்சி பன்னியாமலையில் உள்ள பொதுக்கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே பொதுக்கழிப்பறையை சரிசெய்ய வேண்டும். மேலும் தண்ணீர் வசதிக்காக புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

-ராஜா, பன்னியாமலை.

தெருவில் தேங்கும் மழைநீர்

தேனி அரண்மனைபுதூரில் பிள்ளையார்கோவில் பின்புறம் உள்ள தெருவில் மழைக்காலத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்து விடுவதால், மக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். தெருவில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுசி, தேனி.

சுகாதாரக்கேடு அபாயம்

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்துலாபுரம் கிழக்கு தெருவில் சாக்கடை கால்வாய் குப்பைகளால் மூடப்பட்டு விட்டது. இதனால் மக்கள் நடமாட முடியவில்லை. கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் சுகாதாரக்கேடு உருவாகும் அபாயம் உள்ளது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

சாக்கடை பாலம் சேதம்

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே உள்ள நரியூத்து கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியின் முன்பு உள்ள சாக்கடை பாலம் சேதம் அடைந்து விட்டது. மாணவ-மாணவிகள் அதிகம் நடமாடும் பகுதி என்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமான சாக்கடை பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும்.

-பொதுமக்கள், நரியூத்து.

பயன்படாத தண்ணீர் தொட்டி

திண்டுக்கல் மென்டோன்சா காலனியில் மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. அதில் உள்ள மோட்டார் சரியாக இயங்காததால் தண்ணீர் தொட்டி பயன்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே மோட்டாரை சரிசெய்து தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-ராஜா, திண்டுக்கல்.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

போடி ரெங்கநாதபுரம் மகாலட்சுமிநகரில் சாக்கடை கால்வாயில் குப்பை, மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய்களை தூர்வாரி அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

-ஜேக்கப், போடி.

துர்நாற்றம் வீசும் குளங்கள்

திண்டுக்கல் நகர மக்களுக்கு ஒருகாலத்தில் தண்ணீர் வழங்கிய குளங்களில் சில தற்போது கழிவுநீர் குளமாக காட்சி அளிக்கின்றன. அதோடு கொசுக்களை உற்பத்தி செய்து சுகாதாரக்கேட்டை உண்டாக்கும் வகையில் மாறிவருகின்றன. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அனைத்து குளங்களையும் தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

பள்ளி கழிப்பறை பராமரிப்பு

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை போதிய சுத்தம் செய்து பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுவதாக மாணவிகள் கூறுகின்றனர். மேலும் ஒருசில மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

-முருகன், பெரியகுளம்.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்