புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-09 18:45 GMT

விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் இலந்தைகுளம் கிராமத்தில் அங்கன்வாடி மையம், பள்ளிக்கு அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது அங்கன்வாடி மையத்திற்கு அருகில் உள்ளதால் இங்குள்ள குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், இலந்தைகுளம்.

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி கிராமம் பஸ் நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் செல்லும் தார்ச்சாலை முழுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது பாருக் அலி, ஆர்.எஸ்.மங்கலம்.

தொற்றுநோய் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி பகுதி சாலையில் குண்டும், குழியுமான சாலையால் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் சிரமத்துடன் சாலையை கடக்கும் நிலை உள்ளது. மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகுக்கும். எனவே தேங்கிய நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஏர்வாடி.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிதாஸ், எஸ்.பி.பட்டினம்.

ஊருணிகள் தூர்வாரப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியில் உள்ள ஊருணிகளில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலந்து மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஊருணி நீரை இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஊருணி மாசடைந்து வருவதால் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஊருணியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது சலீம், புதுமடம்.

Tags:    

மேலும் செய்திகள்