தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி சர்ச் எதிரே உள்ள தெருவில் பல நாட்களாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார், முதுகுளத்தூர்.
அப்புறப்படுத்த வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடிப்பதால் சிறுவர்கள்- சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், பரமக்குடி.
சாலையில் கொட்டப்படும் குப்பை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கட்டுபள்ளி செல்லும் வழியில் குப்பைகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் குப்பைகள் சிதறி வாகனஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. தேங்கிய குப்பைகளால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஏர்வாடி.
பயணிகளின் எதிர்பார்ப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் மக்கள் கோவில் மற்றும் தீவின் அழகை சுற்றிப்பார்க்க குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் தீவின் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாரிமுத்து, ராமேசுவரம்.
பஸ் நிலையம் அமைப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி கிராமத்தில் பஸ் நிலையம் இல்லை. இதனால் பஸ்களும் கிழக்கு கடற்கரை சாலையிலே பயணிகளை இறக்கி விடுவதால் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் ஊருக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டி உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராமத்தில் பஸ்நிலையம் அமைத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமது, திருப்பாலைக்குடி.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்சார வினியோகமானது நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், சிறு-குறு தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தடையற்ற மின்சார வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமஸ்அந்தோணி, ஆர்.எஸ்.மங்கலம்.