தெரு நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சில நாய்கள் நோயுற்று சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப் படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமது, திருப்பாலைக்குடி.
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் முத்து ரகுநாதபுரம் அருகில் குப்பைகள் அதிகஅளவில் கொட்டப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் மற்றும் விஷ பூச்சிகள் அதிலிருந்து வரக்கூடியதாகவும் இருக்கின்றது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சலீம், ராமநாதபுரம்.
தண்ணீர் வசதி செய்து தருவார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காக்காதோப்பு பகுதியில் உள்ள மயானத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் இங்கு வருவோர் குளிப்பதற்கும், ஏனைய பிற சடங்குகள் செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அவதியடைகின்றனர். எனவே இந்த மயானத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், காக்காதோப்பு.
போக்குவரத்துக்கு இடையூறு
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை ராஜவீதி, தலைமை தபால் அலுவலகம் சாலை ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்ராகிம், ராஜவீதி,ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். சாலையில் பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ்லுல்ஹக், ஆர்.எஸ்.மங்கலம்.