புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-23 18:45 GMT

வீணாகும் கண்மாய் நீர்

சிவகங்கை மாவட்டம் தி.சூரக்குடி ஊராட்சி கண்மாய் மடை சேதமடைந்துள்ளது. இதனால் கண்மாயில் உள்ள நீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கண்மாயில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய் மடையை புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லீதாசன், தி.சூரக்குடி.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி ஊராட்சிக்குட்ட பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், மானாமதுரை.

பஸ் இயக்கப்படுமா?

பொன்னமராவதியிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்டுவந்த பஸ் கடந்த 2 வருடங்களாக பிராண்மலை வந்து செல்லாமல் சிங்கம்புணரி வரை மட்டுமே வந்து செல்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் பழைய வழித்தடத்தில் பஸ் இயக்கிட வேண்டும்.

ஜாபர் அலி, சிங்கம்புணரி.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.மேலும் வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ், இளையான்குடி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?

பொதுமக்கள், தேவகோட்டை.

Tags:    

மேலும் செய்திகள்