தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ஆறுமுகம், நெல்லை.
குண்டும் குழியுமான சாலை
திசையன்விளை செல்வமருதூர் பெரியம்மன் கோவில் எதிரில் உள்ள நடுநிலைப்பள்ளி முன்பாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
குறுகலான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு
நெல்லை அருகே மணப்படை வீடு முதல் கீழநத்தம், மேலூர் வழியாக பொட்டல் வரையிலும் சாலை குறுகலானதாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-பிரவீன் பெரியசாமி, மணப்படை வீடு.
பயணிகள் நிழற்கூடம் தேவை
களக்காடு நகராட்சி வடமலைசமுத்திரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள மரத்தடியில் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-வல்லரசு கணேசன், பத்மனேரி.
தடம் மாறும் பஸ்சால் பயணிகள் அவதி
திசையன்விளையில் இருந்து பட்டர்புரம் வழியாக நெல்லைக்கு செல்லும் அரசு பஸ் (தடம் எண்:- 173) கடந்த சில நாட்களாக பட்டர்புரத்துக்கு செல்லாமல் மெயின் ரோட்டிலேயே சென்று விடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு பஸ்சை உரிய வழித்தடத்தில் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ஆறுமுகம், நாங்குநேரி.
மின்விபத்து அபாயம்
தென்காசி மாவட்டம் கடையம்- மடத்தூர் சாலையோரம் புளிய மரங்களுக்கு இடையே உயரழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. மரத்தின் கிளைகள் மின்கம்பிகளில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன் மின்விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பிகளின் அருகில் செல்லும் மரக்கிளைகளை வெட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
- கண்ணன், கேளையாபிள்ளையூர்.
சுகாதாரக்கேடு
ஆலங்குளம் 4-வது வார்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் பதிக்கப்பட்ட பேவர்பிளாக் கற்கள் பெயர்ந்து, அருகில் உள்ள வாறுகாலுக்குள் கிடக்கின்றன. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, வாறுகால் மற்றும் சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- ராஜா, ஆலங்குளம்.
சேதமடைந்த சாலை
சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் யூனியன் குருக்கள்பட்டியில் இருந்து கல்லத்திகுளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- செல்வகுமார், கல்லத்திகுளம்.
பழுதடைந்த வாய்க்கால் மடை
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் காசிவிசுவநாதபுரம் இந்திரா காலனி பஸ் நிறுத்தம் மேற்கு பகுதியில் சாலையின் குறுக்காக செல்லும் வாய்க்கால் மடை பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அங்கு சிறிய வாய்க்கால் பாலம் அமைத்து தருவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
பஸ் வசதி தேவை
செங்கோட்டை அருகே மேக்கரையில் இருந்து தென்காசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேக்கரையில் இருந்து தென்காசிக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்லும் வகையில் காலை, மாலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அந்த வழித்தடத்தில் போதிய அரசு டவுன் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- முகம்மது அலி, தென்காசி.