'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் தேங்கும் மழைநீர்
வேடசந்தூர் தாலுகா எரியோட்டில் மின்வாரிய அலுவலகம் முன்பு சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஒருசிலர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, எரியோடு.
மயானம் சீரமைக்கப்படுமா?
பெரியகுளம் ஒன்றியம் எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டையில் மயானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து கொண்டு அடக்கம் செய்வதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த மயானத்தை சீரமைக்க வேண்டும்.
-சூரியபிரகாஷ், புதுக்கோட்டை.
களமாக மாறிய சாலை
உப்புக்கோட்டையில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. அதை பொருட்படுத்தாமல் சிலர் சாலையை களமாக மாற்றி சோளம் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்து சாலையில் உலர்த்துகின்றனர். இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், டொம்புச்சேரி.
மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு
பழனி ஒன்றியம் பச்சளநாயக்கன்பட்டியில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளில் சிலர் மோட்டாரை பொருத்தி, குடிநீரை திருடுகின்றனர். இதனால் மோட்டார் பொருத்தாத இணைப்புகளில் மிகவும் குறைவாகவே குடிநீர் வருகிறது. பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க மோட்டார் வைத்து குடிநீர் திருடுவது தடுக்க வேண்டும்.
-ஜெகநாதன், பச்சளநாயக்கன்பட்டி.
மார்க்கெட்டில் மழைநீர்
ஆண்டிப்பட்டியில் உழவர்சந்தை எதிரே காமராஜர் மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வந்து இறக்கி வைக்க முடியவில்லை. எனவே மார்க்கெட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
-நந்தகோபால், ஆண்டிப்பட்டி.
பயணிகள் நிழற்குடை தேவை
தேவாரம் பஸ் நிலையத்தில் பணிகள் நடைபெறுவதால் போலீஸ் நிலையம் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் கொளுத்தும் வெயில், கொட்டும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், தேவாரம்.
பூங்கா பயன்பாட்டுக்கு வருமா?
திண்டுக்கல் ராஜலட்சுமிநகரில் உள்ள மாநகராட்சி பூங்கா பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் முதியவர்கள் நடை பயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் வசதியாக இருக்கும். எனவே பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-சக்திவேல், ராஜலட்சுமிநகர்.
சாலையில் பள்ளம்
திண்டுக்கல் பாரதிபுரம் டிப்போ சாலையில் வரதராஜா பள்ளி அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் வருவோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். விபத்தை தவிர்க்க சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
-ஜெயச்சந்திரன், பாரதிபுரம்.
வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர்
ஆண்டிப்பட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சி நேருஜிகாலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. சுகாதாரக்கேடு உருவாகும் முன்பு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-சந்திரன், ரெங்கசமுத்திரம்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
திண்டுக்கல் நகரில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையின் குறுக்காக செல்லும் மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி மாடுகளும் காயம் அடைகின்றன. இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
-------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
---