தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
ரோட்டில் ஆபத்தான பள்ளம்
நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதில் பஸ்நிலையத்தையொட்டி உள்ள ரோட்டில் மெகா பள்ளம் உருவாகி உள்ளது. வாகனங்களில் செல்வோர் பள்ளம் இருப்பதை தெரியாமல், அருகில் சென்றதும் திடீர் பிரேக் போடுவதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த பள்ளத்தை நிரப்ப சிறிதளவு மண் போட்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் மண் போட்ட இடம் தெரியாத அளவுக்கு காணாமல் போய் விட்டது. எனவே மாநகரின் மைய பகுதியான சந்திப்பு-மதுரை ரோட்டில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூட வேண்டும். இதேபோல் அம்பேத்கர் சிலை முன்பும், பஸ் நிலையத்தின் வடக்கு பகுதி போலீஸ் குடை அருகில் உள்ள பள்ளங்களையும் சீரமைக்க வேண்டும்.
-பிரபாகரன், நெல்லை.
சேதம் அடைந்த மின்கம்பம்
நெல்லை மாவட்டம் மானூரில் சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் ஆபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.
-பாஸ்கரன், மானூர்.
தெருவிளக்குகள் எரியவில்லை
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு மேம்பால பகுதி வடக்குப்புறம் உள்ள தெரு விளக்குகள் கடந்த 5 நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் சந்திப்பு மேம்பால பகுதியில் இரவில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு இருட்டாக உள்ளது. எனவே உடனே தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுடலைமாடசாமி, கைலாசபுரம்.
காட்சி பொருளான குடிநீர் தொட்டி
செல்வமருதூர் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மோட்டார் திறன் குறைவால் குடிநீர் ஏற்ற முடியவில்லை. இதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுக நயினார், திசையன்விளை.
குளத்தில் மறுகால் சீரமைக்கப்படுமா?
ஏர்வாடி அருகே செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மறுகாலின் சுவர்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. குளத்தின் மறுகாலில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்துள்ள குளத்தின் மறுகாலை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கக்கன், செங்களாகுறிச்சி.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அய்யனூர் பிள்ளையார் கோவில் தெருவில் மின்கம்பி துண்டித்து இருந்ததால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாமல் இருந்தது. இதுகுறித்து `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் ஞானப்பிரகாசம் என்பவர் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் நடவடிக்கை எடுத்து சீரமைக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. புகார் பெட்டி செய்தி எதிெராலியாக, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்தவர்களுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குண்டும், குழியுமான சாலை
சிவகிரி தாலுகா தென்மலை வழியாக சுப்பிரமணியபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம் புதூர் வரை செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகதீசன், அருகன்குளம்.
ஒன் டூ ஒன் பஸ் இயக்க வேண்டும்
சுரண்டையில் இருந்து நெல்லைக்கு மாணவர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் காலையில் வந்து செல்கிறார்கள். எனவே காலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் சுரண்டையில் இருந்து நெல்லைக்கு செல்ல முடியவில்லை. இதேநிலை தான் மாலையிலும் உள்ளது. எனவே சுரண்டையில் இருந்து ஒன் டூ ஒன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பச்சமுத்து, கீழ சுரண்டை.
எரியாத தெருவிளக்குகள்
கடையம் மெயின் பஜாரில் இருந்து மாட்டு சந்தை அருகில் வரை கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் உள்ளிட்டவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மின் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-திருக்குமரன், கடையம்.
சாலை வசதி வேண்டும்
ஆலங்குளம் பேரூராட்சி அலுவலக பின்புறம் பொது நூலகம் உள்ளது. இங்கு செல்ல வசதி சாலை வசதி இல்லை. கழிவுநீரை கடந்து தான் நூலகம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ் சொக்கலிங்கம், ஆலங்குளம்.