தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-11 16:20 GMT

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் பின்புறம் உள்ள சாலையில் மின்கம்பங்களில் இருந்து வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகிறது. இதனால் அந்த சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகளில் மின் கம்பிகள் உரசியபடி செல்கின்றன. எனவே, அந்த சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், மின்கம்பிகளை உயர்த்தி கட்டவும் கேட்டுக் கொள்கிறேன்.

சுதன், பாளையங்கோட்டை

உடைந்து கிடக்கும் சாக்கடை மூடி

நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் இருந்து சிந்துபூந்துறைக்கு செல்லும் சாலைத்தெரு தொடக்கத்தில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல அவதிப்படுகிறார்கள். எனவே, உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியை உடனே சீரமைக்க வேண்டும்.

ரமேஷ், நெல்லை சந்திப்பு.

சாலையை சீரமைக்க வேண்டும்

நாங்குநேரி பேரூராட்சி தென்னிமலை, பட்டபிள்ளைபுதூர், சிங்கநேரி, துலாச்சேரி, புத்தநேரி வழியானது பிரதான போக்குவரத்து பாதையாகும். இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

முத்துக்குமார் சேகர், நாங்குநேரி.

அடிப்படை வசதி தேவை

திசையன்விளை தாலுகா குட்டம் ஊராட்சி பெரியதாழை கிராமம் இம்மானுவேல் நகரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால், இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. எனவே, இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

தினேஷ், இம்மானுவேல் நகர்.

முட்செடிகள் அகற்றப்படுமா?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் இடுகாட்டில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. கடற்கரைக்கு செல்லும் வழியில் முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆகவே, முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாகவும், சமீபத்தில் பெய்த மழையால் ேசறும், சகதியுமாகவும் கிடக்கிறது என்று கடையத்தை சேர்ந்த திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர். எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுைணயாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

வேகத்தடை வேண்டும்

ஆலங்குளம்-முக்கூடல் ரோட்டில் சிங்கம்பாறை- துலுக்கப்பட்டி நான்கு முக்கு சந்திப்பில் வேகத்தடை இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஆறுமுககுமார், சிங்கம்பாறை.

நாய்கள் தொல்லை

வீரகேரளம்புதூர் தாலுகா சோலைச்சேரி கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடங்கள் செல்லும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே, இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

உதயா, சோலைச்சேரி.

வீணாக செல்லும் குடிநீர் 

வீரகேரளம்புதூர் தாலுகா கருவந்தா கிழக்கு உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு வழியாக அச்சன்குன்றம் மற்றும் அதன் சுற்றி உள்ள ஊர்களுக்கு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் தற்போது உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. அந்த பகுதியில் அடிக்கடி இதுபோல் குடிநீர் குழாய் சேதம் அடைந்து காணப்படுகிறது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சத்யராஜ், கருவந்தா.

* செங்கோட்டை வட்டம் இலத்தூர் கிராமத்தில் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் கேட்வால் பகுதி பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

எஸ்ரா டேனியல், இலத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்