'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-03 21:25 GMT

முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் மாவட்டத்தில் முககவசம் இதுவரை கட்டாயமாக்கப்படாமல் உள்ளது. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் செல்கிறார்கள். இதனால் கொரோனா மேலும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி முககவசம் அணிவதை கட்டாயமாக்கிட வேண்டும்.

-பிரபு, கிருஷ்ணகிரி.

====

சாலையில் ஓடும் கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் அஜ்ஜனஅள்ளி ஊராட்சி மூங்கில் மடுவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதன் காரணமாக அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடி பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார ்கேடும் ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று பரவும் அபாயம் உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்து பலன் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

-முரளி, மூங்கில் மடுவு, தர்மபுரி.

====

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

சேலம் மேச்சேரியில் இருந்து மல்லிகுந்தம், உப்புப்பள்ளம், கூனாண்டியூர் வழியாக கீரைகாரனூர் வரை 2 அரசு பஸ்கள் சென்று வந்தன. தற்போது அதில் ஒரு பஸ் முன் அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் கடும் சிரமப்படுகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பகத்சிங், மேச்சேரி, சேலம்.

வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு காலை மற்றும் இரவில் ஒரு டவுன் பஸ் மட்டுமே சென்று வருகிறது. எடப்பாடியில் இருந்து வெண்ணந்தூர் வழியாக நாமக்கல் செல்லும் அந்த பஸ்சில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கிறார்கள். இந்தநிலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் வயதானவர்கள், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

======

தெருநாய்கள் தொல்லை

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ராமலிங்கபுரம் காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சில தெருநாய்களுக்கு வெறிபிடித்து ஆடு, மாடுகளை கடிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் தெருவில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடித்துச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோகிலா, ராமலிங்கபுரம் காலனி, சேலம்.

===

சாலை ஆக்கிரமிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மல்லிப்பாளையத்தில் சாலையை நீண்ட நாட்களாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சாலையை அளவீடு செய்து புதுப்பித்து தரவேண்டும்.

-ஹரிகிருஷ்ணன், எடப்பாடி.

===

அடிப்படை வசதிகள் தேவை

சேலம் சன்னியாசிகுண்டு மின்வாரிய அலுவலகம் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

-ராஜு, சன்னியாசிகுண்டு, சேலம்.

====

சரிசெய்யப்பட வேண்டிய குடிநீர் குழாய்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் இருந்து காகாப்பாளையம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குடிநீர் குழாய் உடைந்த இடத்தில் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதால் கம்பு வைத்து உள்ளனர். பல மாதங்களாக இதே நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து சாலையை சீரமைக்க முன்வருவார்களா?

-சுப்ரமணி, ஆட்டையாம்பட்டி, சேலம்.

சேலம் அம்மாபேட்டை குமாரமுத்துசாமிசெட்டி தெருவில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வீணாக தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு அடிக்கடி குடிநீர் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்தால் குடிநீர் வீணாகுவதை தவிர்க்கலாம்.

-மோகன், குமாரமுத்துசாமிசெட்டி, சேலம்.

====

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையோரம் சாக்கடை கல்வாய் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாயில் புற்களும், செடி கொடிகளும் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. மழைக்காலம் வருவதற்கு முன்பு அதிகாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் உள்ள செடி கொடிகளை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ராஜா, ஜலகண்டாபுரம், சேலம்.

=====

நோய் பரவும் அபாயம்

சேலம் மாநகராட்சி மேட்டு சீனிவாசா தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி துற்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள், பூச்சிகள் அதிகரித்து தொல்லையாக இருக்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ்குமார், மேட்டுசீனிவாச தெரு, சேலம்.

Tags:    

மேலும் செய்திகள்