தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-24 20:48 GMT

வேகத்தடை அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கோட்டப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டுப்புலியூர் மற்றும் புலியூர் பஸ் நிறுத்தங்கள் அருகே காலையும் மாலையும் சிப்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இரு பஸ் நிறுத்தங்கள் அருகேயும் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

-ஜி.நடராஜன், மேட்டுப்புலியூர்,கிருஷ்ணகிரி.

சீரமைக்க வேண்டிய மின்விளக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கோழிக்கால் நத்தம் ரோட்டில் 33-வது வார்டில் அமைதி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள உயர் மின் கம்பத்தில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் பூங்காவிற்கு வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள் அமைதி பூங்காவில் உள்ள மின்கம்பத்தில் இரவில் மின்விளக்கு எரியச் செய்ய வேண்டும்.

-மோகன், திருச்செங்கோடு, நாமக்கல்.

விரிசல் விழுந்த குடிநீர்தொட்டி 

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சிங்கிரிபட்டி ஒட்டங்காடு காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அந்த குடிநீர் தொட்டியி்ல் ஆங்காங்கே விரிசல் விழுந்துள்ளதால் குடிநீர் வீணாகிறது. மேலும் குடிநீர் குழாயில் பாசிபடர்ந்து காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி பழைய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

-சென்னகிருஷ்ணன், சிங்கிரிபட்டி, சேலம்.

பராமரிப்பு இல்லாத கிணறு 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செட்டியூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொது குடிநீர் கிணறு உள்ளது. தற்போது அந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பு இல்லாமல் காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகரித்துவிட்டன. அதன் அருகே பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிணற்றை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விமல், செட்டியூர், சேலம்.

24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீரகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்க கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனமானது 24 மணிநேரமும் இயக்கப்பட வேண்டும். ஆனால் வீரகனூரில் பகல் 12 மணிநேரம் மட்டுமே இயக்கப்படுகிறது. இரவு 12 மணிநேரம் இயக்கப்படாமல் உள்ளது. எனவே 108 ஆம்புலன்ஸ் சேவையை பகல் இரவு என்று 24 மணி நேரமும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏ.ரவிசந்திரன், வீரகனூர், சேலம்.

Tags:    

மேலும் செய்திகள்