'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி கருப்பசாமி கோவில் தெருவில் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். -ஆல்பர்ட், திசையன்விளை.
மயானத்துக்கு பாதை வசதி தேவை
மானூர் பஞ்சாயத்து புதூரில் மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இறந்தவர்களின் உடலை அப்பகுதியில் உள்ள வயல்வெளி வழியாகத்தான் மயானத்துக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். -பாலகிருஷ்ணன், புதூர்.
தெருவில் தேங்கிய கழிவுநீர்
நெல்லை மாநகராட்சி 13-வது வார்டு தச்சநல்லூர் மேலக்கடை நியூ காலனி பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளது. இதனால் அங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் குளம் போன்று தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -கனகமணி, தச்சநல்லூர்.
உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
காவல்கிணறு சந்திப்பில் இருந்து வடக்கன்குளம் செல்லும் ரோடு பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே செல்வதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, அங்கு உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். -ஜெயபால், காவல்கிணறு.
காட்சிப்பொருளான தாலுகா அலுவலகம்
திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு பல மாதங்களாக பயன்பாடற்று காட்சிப் பொருளாகவே உள்ளது. அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனினும் திசையன்விளையில் வாடகை கட்டிடத்திலேயே தாலுகா அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே, புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.-ஞானராஜ், திசையன்விளை.
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்
களக்காடு நகராட்சி 6-வது வார்டு வடமலைசமுத்திரம் மெயின் ரோட்டில் உள்ள தோட்டம் வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக தொங்கியவாறு செல்கின்றன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உயர் அழுத்த மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -ராமச்சந்திரன், வடமலைசமுத்திரம்.
சேதமடைந்த சாலை
முக்கூடல் மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து நகருக்குள் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். -ஆதிமூலம், முக்கூடல்
ஆபத்தான மின்கம்பம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே பீடர் ரோடு புதுமனை தெருவில் உள்ள மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். -சண்முகப்பிரியா, செங்கோட்டை.
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள்
தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் கோரம்பள்ளத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அடிக்கடி சுற்றி திரிகின்றன. இதேபோன்று அந்தோணியார்புரம், மறவன்மடம் பகுதிகளிலும் நான்குவழிச்சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். -பாலசுப்பிரமணியன், கோரம்பள்ளம்.
குளத்தின் மறுகால் சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை குமாரகிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள பெரியகுளத்தின் மறுகால் பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் குளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேக்க முடியாமல் வீணாக செல்கிறது. எனவே, பெரியகுளத்தில் சேதமடைந்த மறுகால் பகுதியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமன், புதுக்கோட்டை.