'தினத்தந்தி' புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 8939278888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-27 23:24 GMT

பயன்படாத குடிநீர்தொட்டி

சேலம் மாநகராட்சி 23-வது வார்டு பழனியப்பா நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.. தற்போது அந்த குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் மோட்டாருக்கு அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் அறை பெயர்ந்து சாக்கடையில் விழும்படியான அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மோட்டாரை சரி செய்து தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.தினேஷ், பழனியப்பா நகர், சேலம்.

===

தார்சாலை புதுப்பிக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை- கெலமங்கலம் ரோட்டில் நெல்லூரில் இருந்து எடவனஅள்ளிக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலை வழியாக தான் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் விளைபொருள்களை ராயக்கோட்டை மார்க்கெட்டுக்கு எடுத்து செல்கின்றனர். தார்சாலை சேதமடைந்து உள்ளதால் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலையை புதுப்பித்து தர வேண்டும்.

-பி.கெம்பன், எடவனஅள்ளி, கிருஷ்ணகிரி.

===

பொது கழிப்பிடம் கட்டப்படுமா?

சேலம் செவ்வாய்பேட்டை சீனிவாசா பூங்கா பகுதியில் பொது கழிப்பிடம் இல்லை. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு பொது கழிப்பிடம் அமைத்து தரவும், அந்த பகுதியை சுத்தமாக வைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீ.நடராஜ், செவ்வாய்பேட்டை, சேலம்.

===

குப்பைகள் அள்ளப்படுமா?

சேலம் 18-வது வார்டு ஸ்டேட் வங்கி ஆபீசர் காலனியில் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு மாதமாக குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விஷப்பூச்சிகளும் அங்கு அதிகமாக காணப்படுகின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

-ஈ.கவுசல்யா, ஸ்டேட் வங்கி காலனி, சேலம்.

===

கொசுத்தொல்லை

சேலம் கிச்சிப்பாளையத்தில் தனியார் திருமண மண்டபம் பகுதியில் மழைநீர் தேங்குகிறது. மேலும் பாதாள சாக்கடை கழிவுநீருடன் கலந்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொசுத்தொல்லையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காதபடி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், கிச்சிப்பாளையம், சேலம்.

===

சேதமடைந்த குடிநீர் தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இந்த கிராமத்திற்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வராஜ், எக்கூர், கிருஷ்ணகிரி.

===

தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையில் பேட்டப்பாளையம் ஊராட்சி கிராயூர் சுடுகாடு அருகே சாலையோரம் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகிறார்கள். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கிராயூர் சுடுகாடு அருகே சாலையோரம் சாக்கடை கழிவுநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பேட்டப்பாளையம், நாமக்கல்.

===

உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை

எடப்பாடியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் சாலையில் ரவுண்டானா உள்ளது. அங்குள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த பல மாதங்களாக எரியவில்லை. இதனால் அங்கு இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரஞ்சித், எடப்பாடி.

====

கிணற்றுக்கு இரும்பு வேலி வேண்டும்

எடப்பாடியை அடுத்த இருப்பாளி கிராமம் மேல் காடு அருகே பழமை வாய்ந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றின் மேல் பாதுகாப்பு கம்பி வேலி இல்லை. கிணற்றின் அருகே குழந்தைகள் விளையாடுகின்றனர். பாதுகாப்பு கருதி தரைமட்டத்திலேயே ஆபத்தான நிலையில் அமைந்துள்ள கிணற்றின் மேற்பகுதியில் இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், இருப்பாளி, எடப்பாடி.

====

Tags:    

மேலும் செய்திகள்