புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-07-12 18:45 GMT

தூர்வாரப்படுமா?

கல்லுகூட்டம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பெரியாப்பள்ளி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றும் வந்தது. தற்போது, இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாராமல் செடி, கொடிகள் வளர்ந்தும், கரைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி அதன் கரைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், கல்லுகூட்டம்.

போக்குவரத்துக்கு இடையூறு

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் இரவிபுதூர்கடை-புலிப்பனம் இடையே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சில கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல், மார்த்தாண்டம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

பூதப்பாண்டி அரசு மருத்துவமனை பின்புறமுள்ள ஸ்ரீநகர் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், முதியோர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

விபத்து அபாயம்

மேக்காமண்டபம் பகுதியில் இருந்து செம்பருத்திவிளை செல்லும் சாலையில் குருவிகாடு உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் மேல்பகுதி மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்ைத நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

வாகன ஓட்டிகள் அவதி

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட விழுந்தயம்பலத்தில் இருந்து அம்சி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், இந்த சாலையோரத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளும் பழுதடைந்து சரியாக எரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், விழுந்தயம்பலம்.

சீரமைக்கப்படுமா?

வடசேரி அசம்பு ரோட்டில் கருத்து விநாயகர் கோவிலின் முன் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீரோடையின் மீது பாதசாரிகளின் வசதிக்காக சிமெண்டு சிலாப்பு போடப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஒரு இடத்தில் சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வடசேரி.

சேதமடைந்த மின்கம்பம்

திட்டுவிளையை அடுத்த அனந்தனார் கால்வாயின் வலதுபுறம் ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் காரியாங்கோணம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து சரிந்த நிலையில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து சாலையில் செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படலாம். எனவே, சரிந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சமியன்பிள்ளை, காயிதேமில்லத்நகர்.

வேகத்தடை தேவை

குளச்சலில் இருந்து முளகுமூடு செல்லும் சாலையில் செம்பொன்விளை சந்திப்பு உள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குளாகி வருகின்றன. மேலும், பாதசாரிகளும் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி இந்த சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், செம்பொன்விளை.

Tags:    

மேலும் செய்திகள்